தமிழகத்தின் செங்கோட்டை அருகே, கிணற்றுக்குள் கிடந்த 8 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள விசுவநாதபுரத்தைச் சேர்ந்தவர் இருளப்ப தேவர். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவருக்கு சொந்தமான தோட்டம் பெரியபிள்ளைவலசை செல்லும் சாலையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று (27ம் திகதி) மாலை, இருளப்ப தேவர் மகன் அய்யப்பன் என்பவர் தோட்டத்தில் உள்ள தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். மின்மோட்டாரை ‘ஒன்‘ செய்து தண்ணீர் பாய்ச்சியபோது, கிணற்றில் இருந்த தண்ணீர் வற்றியது.
அப்போது, கிணற்றுக்குள் சில மோட்டார் சைக்கிள்கள் கிடந்தது தெரிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அய்யப்பன், இதுகுறித்து உடனடியாக செங்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார், பொதுமக்களின் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த 8 மோட்டார் சைக்கிள்களை வெளியே கொண்டு வந்தனர்.
கிணற்றுக்குள் இருந்து மோட்டார் சைக்கிள்கள் எடுக்கப்பட்ட தகவல் அறிந்ததும், ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடினர்.
‘மோட்டார் சைக்கிள்களை கிணற்றுக்குள் போட்டுச் சென்ற மர்மநபர்கள் யார்..? அவற்றை எதற்காக அங்கு கொண்டு வந்து போட்டனர்..? அவைகள், பல்வேறு பகுதிகளில் திருடப்பட்டவையா..?’ என்பது குறித்து செங்கோட்டை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.