கேரளாவில் தமிழக தம்பதி மீது தாக்குதல்.!

கேரளாவில், தமிழகத்தை சேர்ந்த தம்பதியை, அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், நடுரோட்டில் தாக்கும் காட்சிகள் என்று ஒரு வீடியோ காட்சி வைரல் ஆகி வருகிறது.

வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பெட்டா எனும் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தை சேர்ந்த அந்த தம்பதி இரவில், போர்வை வியாபாரம் செய்ய சென்ற போது, உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர் என்று கூறப்படும் ஒருவர் அவர்களை அவதூறாக பேசி, தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

பெண் என்றும் பாராமல் கன்னத்தில் அந்த நபர் ஓங்கி அறைந்துள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பெண் நிலைகுலைந்து போய் உதவி கேட்டு கதறும் நிலையில், அனைவரும் வேடிக்கை பார்க்கும் காட்சி வேதனையளிப்பதாக அமைந்துள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியதை பார்த்த, சிலர், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார், தாக்குதல் நடத்தியவரை, அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்ததாகவும் பிறகு அவரை சக அரசியல் கட்சி பிரமுகர்கள் காவல் நிலையத்தில் இருந்து மீட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.