பரோலில் விடுவிக்கப்பட்டு தனிவீட்டில் தங்கியுள்ள நளினி!

சிறையிலிருந்து பரோலில் வெளியில் வந்துள்ள நளினி சிங்கராயர் என்பவரின் வீட்டில் தங்கியுள்ள நிலையில் அவர் தங்குவதற்கு வீடு கொடுத்ததற்கான காரணம் குறித்து சிங்கராயர் பேசியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் பெண்கள் சிறையில் இருந்த நளினி தனது மகள் திருமண ஏற்பாட்டுகளுக்காக ஒரு மாத பரோலில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து வேலூரில் உள்ள ரங்காபுரத்தில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவையை சேர்ந்த சிங்கராயர் என்பவர் வீட்டில் நளினி தங்கியுள்ளார்.

இது தொடர்பில் சிங்கராயர் கூறுகையில், இந்த பிரச்சனை தொடர்பான போராட்டத்தில் 15 ஆண்டுகளாக நான் பங்கேற்று வருகிறேன்.

நான் பிறந்து வளர்ந்தது ராமநாதபுரம் மாவட்டம் என்றாலும், 30 வருடங்களாக வேலூரில் தான் வசித்து வருகிறேன். எனக்கு நளினியை தனிப்பட்ட முறையில் தெரியாது, நான் அவரை முன்னர் பார்த்தது கூட இல்லை.

இந்த சூழலில் நளினி பரோலில் வெளியில் வந்தவுடன் அவர் தங்குவதற்கு சில இடங்களில் ஏற்கனவே கேட்டனர், ஆனால் பயத்தின் காரணமாக பலரும் வீடு தர முன்வரவில்லை.

பின்னர் என்னிடம் நளினி வழக்கறிஞர் வந்து பேசினார், என்னால் அவர் பேச்சை மறுக்கமுடியவில்லை.

அதனால் தான் என் வீட்டில் நளினியை தங்க வைக்க சம்மதித்தேன்.

என்னை போல பல லட்சம் சிங்கராயர்கள் உள்ளார்கள், ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, எனக்கு கிடைத்துள்ளது.

பொலிசார் என் பின்புலத்தை பற்றி தீவிரமாக விசாரித்த பின்னரே நளினி என் வீட்டில் தங்குவதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

என் வீட்டின் முதல் மாடியில் நளினி உள்ளார், அவருக்கு வெளியில் இருந்தெல்லாம் உணவு வரவில்லை, என் வீட்டில் சமைக்கும் உணவு தான் அவருக்கு கொடுக்கப்படுகிறது.

முதல் முறையாக நளினியை பார்க்கும் போது, நாம் சினிமாவில் பார்த்திருப்போமோ, பல ஆண்டுகளாக ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தவர் வெளியில் வந்தால் எப்படியிருக்கும்?

அப்படி தான் அவரின் கண்களில் கண்ணீரை பார்த்தேன் என கூறியுள்ளார்.