பெண்களை அவமதித்த மதுபான விளம்பரம்!

ஜேர்மன் மதுபான நிறுவனம் ஒன்று பெண்களை அவமதிக்கும் விதத்தில் விளம்பரம் செய்ததற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதையடுத்து அந்த விளம்பரம் நீக்கப்பட்டது.

ஜேர்மன் விளம்பர கவுன்சில், அந்த விளம்பரத்தை பாலின ரீதியிலானது என்று கூறி அதை அகற்றியது.

அந்த விளம்பரத்தில் நரியின் முகம் கொண்ட ஒரு கவர்ச்சியான பெண், ஒரு கிரில்லின் மீது, வேகவைத்த ஒரு இறைச்சித் துண்டுடன் அமர்ந்திருக்கிறார். ஆபாசமான இரட்டை அர்த்த வாசகம் ஒன்றை அந்த பெண் சொல்வது போல் அந்த விளம்பரம் அமைக்கப்பட்டிருந்தது.

அந்த விளம்பரத்தின் போஸ்டர்கள் Düsseldorf நகரம் முழுவதிலும் ஒட்டப்பட்டிருந்த நிலையில், சமத்துவம் தொடர்பான அலுவலகம், அது தொடர்பாக புகார் ஒன்றை அளித்தது.

இது போன்ற பல புகார்கள் தொடர்ந்து வரவே, விளம்பர கவுன்சில் தலையிட்டு அந்த விளம்பரத்தை அகற்றுமாறு அந்த மதுபான நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது.

ஜேர்மனியைப் பொருத்தவரையில் விளம்பரங்கள் சட்டத்திற்குட்பட்டவையாகும்.

தவறாக வழி நடத்தும், தொந்தரவை ஏற்படுத்தும் மற்றும் சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விளம்பரங்கள் தடை செய்யப்படலாம்.

இதற்கிடையில், பொது இடங்களில் அந்த விளம்பரம் அகற்றப்பட்டாலும், அந்த நிறுவனத்தின் சமூக ஊடக சேனல்களில் அது தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது.