இலங்கையை பௌத்த நாடாக பிரகடனப்படுத்தும் ஞானசார தேரர்..?

இது ஒரு பௌத்த நாடு என ஞானசார தேரர் பிரகடனப்படுத்த முயல்கிறார். அவருக்கு மன்னிப்பு அளித்து விடுவித்து இன நல்லிணக்கத்தை கெடுக்கிறார்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

புத்த விகாரைகள் தமிழர் தேசங்களில் பலாத்காரமாக அமைத்தல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் இந்த விடயத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் தான் எமது மக்களின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

திருகோணமலை கன்னியாவில் நடந்த விடயத்தில் கூட அங்குள்ள இனவாத பிக்குள் மற்றும் தொல் பொருட் திணைக்களத்தின் செயற்பாடுகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்கவில்லை.

இந்த விடயங்களை இப்பொழுது உள்ள அரசுக்கு ஆதரவு வழங்க முன்னர் அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்திய பின்னர் தான் நாம் வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருந்தோம். அதன் பின்னர் தான் போராட்டங்களும் வெடித்தன.

ஒரு மதத்தின் மீது இன்னொரு மதம் ஆதிக்கம் செலுத்த முடியாது. இது ஒரு பௌத்த நாடு என பிரகடனப்படுத்த வெளிக்கிடுகிறார் ஞானசாரதேரர். அவருக்கு மன்னிப்பு கொடுத்து விடுவிக்கின்றார் ஜனாதிபதி. எனவே இவர்கள் கடிவாளம் போட வேண்டியவர்களை அவிழ்த்து விட்டு இன நல்லிணக்கத்தை கெடுக்கிறார்கள்.

அரசின் தலைவர் மைத்திரிபால சிறிசேன. அமைச்சரவையின் தலைவரும் அவரே. அவர் ஜனாதிபதியாக இருக்கிறார். அதேபோல் ரணில் பிரதமராக இருக்கிறார். அப்படி இருக்கும் போது இப்படியான சம்பவங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.