தாய்க்கு வந்த எச்.ஐ.வி-யால் 15 வயது மகனுக்கு நேர்ந்த கதி..

தமிழகத்தில் எச்.ஐ.வி. பாதித்த மாணவன் 10 நாட்களுக்கு பிறகு மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை காரணமாக வேறு அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளான்.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் கேரளாவில் லொறி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

லொறி டிரைவரின் 15 வயது மகனுக்கும் எச்.ஐ.வி. நோய் பாதிப்பு இருந்தது.

இந்தநிலையில் அங்குள்ள ஊர் கோவிலில் தங்கியிருந்து வந்த மாணவன் 10-ம் வகுப்பு படிப்பதற்காக அரசு பள்ளியில் சேர்க்கைக்காக விண்ணப்பித்திருந்தான். ஆனால் எச்.ஐ.வி. பாதித்து இருப்பதால் அந்த பள்ளியில் மாணவனை சேர்க்க தலைமையாசிரியர் மறுத்து விட்டார்.

இதுகுறித்து மாணவனின் தந்தை மற்றும் உறவினர்கள் கடந்த 11-ந்தேதி பெரம்பலூர் ஆட்சியர் சாந்தாவிடம் புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் அரசு பள்ளியில் எச்.ஐ.வி. பாதித்த மாணவனை சேர்க்காதது குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க கோரி தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் மற்றும் ஆட்சியர் சாந்த்தா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனால் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மாணவனை முதலில் சேர்த்து கொண்டதாகவும், வகுப்பில் அவனது கற்கும் திறன் சரியாக இல்லாததால்தான் மாணவன் தொடர்ந்து படிக்க அனுமதிக்கவில்லை என்றும் தலைமையாசிரியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய சாந்தா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கனிடம் மாணவனை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால் மாணவனின் தந்தை அதே பள்ளியில் தனது மகனை சேர்க்க விரும்பவில்லை.

மாணவனுக்கு எச்.ஐ.வி. இருப்பது அனைவருக்கும் தெரிந்ததாலும், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் இடையே பிரச்சினை ஏற்பட்டதாலும் தங்களுக்கு மன உளைச்சல் இருப்பதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மாணவன் மற்றொரு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.