நிலவுக்கு சென்று மனிதர்கள் தங்க உள்ளனர்: நாசா அறிவிப்பு!

மனிதர்கள் நிலவுக்கு சென்று தங்க உள்ளதாக விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ‘ஆர்ட்டெமிஸ்’ என்ற விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதில் நிலவுக்கு பெண்ணை முதல் முறையாக அனுப்புவது, நிலவின் தென் துருவத்திற்கு வீரர்களை அனுப்புவது ஆகியவை அடங்கும்.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கு, நிலவை தளமாக பயன்படுத்த உள்ளது நாசா. இந்த விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகவே தற்போது நிலவுக்கு மனிதர்கள் அனுப்பப்பட உள்ளனர்.

விஞ்ஞானி லிண்ட்சே ஐட்சிசன் இந்த ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் பணியாற்றுகிறார். அவர் விண்வெளி ஆடைகளை வடிவமைத்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரது கேள்வி-பதில் அமர்வு குறித்து நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதில், ‘இந்த முறை நிலவுக்குச் செல்கிறோம். அங்கு தங்குவதற்காக’ என்ற குறிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிண்ட்சே ஐட்சிசன் இதில் குறிப்பிடப்பட்டுள்ளார். இதன்மூலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்ப உள்ளது.