யாழ்.பருத்தித்துறையில் வைத்தியசாலைக்குள் புகுந்து நோயாளியை தாக்கிய ரௌவுடிக் கும்பல்….!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் நேற்றிரவு அத்துமீறி உள்நுழைந்த ரௌடிக்கும்பல் ஒன்று, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதால் அவர் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளார்.தாக்குதலை தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அவரும் சிறு காயமடைந்தார்.

வடமராட்சியின் துன்னாலை பகுதியில் இடம் பெற்ற தகராறொன்றில் காயமடைந்த ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்தநிலையில் நேற்றிரவு 7.20 மணியளவில் வைத்தியசாலையின் ஆண்கள் விடுதிக்குள் நுழைந்த ரெடிளக்கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. வைத்தியசாலை ஊழியர்கள் அதை தடுக்க முற்பட்டபோது, அவர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.

உடனடியாக வைத்தியசாலை பொலிசாருக்கு அறிவிக்கப்பட, அவர்கள் வந்து தாக்குதலை தடுக்க முற்பட்டனர்.பொலிசார் மீதும் ரௌடிகள் தாக்குதல் நடத்தினர். ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் நிலத்தில் வீழ்த்தி தாக்கப்பட்டார்.தாக்குதலிற்கிலக்கான நோயாளி, தலையில் பலத்த அடிபட்டு ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், இன்று காலை 10 மணியிலிருந்து வைத்தியசாலை பணியாளர்கள், தாதியர்கள்,வைத்தியர்கள் அனைவரும் வைத்தியசாலையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆயுதம் ஏந்திய பொலிசாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தி வைத்தியசாலையினதும், நோயாளர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.