கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வெளியேறும் பிரபல ஜாம்பவான் !

ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஜாக் கல்லீஸ் அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருந்தவர் ஜேக் கல்லீஸ். ஓய்வு பெற்ற பின்னர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வந்த கல்லீஸ், கடந்த 2015ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

அவரது தலைமையில் மூன்று முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால், இந்த ஆண்டு ஐ.பி.எல்லில் மோசமான தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணி, லீக் சுற்றுடன் வெளியேறியது.

இதனைத் தொடர்ந்து அணியை மேம்படுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் விரும்பியது. இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் கல்லீஸ் மற்றும் துணை பயிற்சியாளர் சைமன் காடிச் ஆகியோர் அணியில் இருந்து வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்லீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2011யில் இருந்து வீரர், ஆலோசகர், தலைமை பயிற்சியாளர் என பணியாற்றியுள்ளேன். தற்போது புதிய வாய்ப்பை தேடுவதற்கான நேரம் வந்துவிட்டது.

ஏராளமான நினைவுகள் உள்ளன. சக வீரர்கள், உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு கட்டாயம் நன்றி கூற விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.