சென்னையில் மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த ராமகிருஷ்ணன் (69) என்பவருடைய மனைவி ஜோதி(60). இவர்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.
தம்பதியினர் இருவரும் மனைவியை பிரிந்து வாழும் தங்களுடைய கடைசி மகனுடன் சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் ராமகிருஷ்ணனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகியதாக தெரிகிறது.
இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற நினைத்த ராமகிருஷ்ணன், தன்னுடைய சொந்த வீட்டை விற்க மனைவி மற்றும் பிள்ளைகளிடம் அனுமதி கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு மறுத்த அவருடைய மனைவி ஜோதி, மீறி வீட்டை விற்றால் அதில் தான் கையெழுத்து போடமாட்டேன் எனக்கூறியுள்ளார்.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் சுத்தியலால் மனைவியின் தலையில் ஓங்கி அடித்துவிட்டு தப்பியுள்ளார்.
இரவு முழுவதும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜோதியை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த அவருடைய கணவர் ராமகிருஷ்ணனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த அவருடைய மனைவி சுயநினைவு திரும்பாமலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.