ரசிகர்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியின் போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான ஐ.சி.சி கிரிக்கெட் உலகக்கிண்ணம் தொடரின் அரையிறுதிப் போட்டியானது நேற்று ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 211 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் பாதியிலேயே ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன், மீதமுள்ள ஆட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், போட்டிக்கு வருகை தந்திருந்த சீக்கிய ரசிகர்கள் சிலர் தாங்கள் அணிந்திருந்த ஆடையில் அரசியல் வசனங்களை கொண்டிருந்தனர்.

மேலும், அரசியல் தொடர்பான பதாகைகளை வைத்திருந்த அவர்கள் பஞ்சாபில் காலிஸ்தானின் சுதந்திர தாயகத்தை உருவாக்குவது குறித்து வாக்கெடுப்பு நடத்துமாறு கூச்சலிட்டனர்.

இதனை பார்த்ததும் விரைந்து வந்த பாதுகாவலர்கள் அவர்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனை உறுதி செய்துள்ள ஐசிசி செய்தி தொடர்பாளர், உலகக்கிண்ணம் தொடரில் இதுபோன்று நடைபெற்று வரும் அரசியல் தொடர்பான நிகழ்வுகளை நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். ஆரம்பத்தில் அந்த குழுவை நிறுத்துமாறும், தொடர்ந்து போட்டியை பார்க்குமாறும் நாங்கள் கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்த போது தான் வெளியேற்றப்பட்டார்கள் என தெரிவித்துள்ளார்.