துபாய் அரசர் மீது குவியும் விமர்சனங்களால் பிரித்தானிய உறவு பாதிக்கலாம்?

துபாய் அரசரின் மனைவி பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், பெண்களை இப்படியா நடத்துவது என துபாய் அரசர் மீது குவியும் விமர்சனங்களால் பிரித்தானியாவுடனான தூதரக உறவு பாதிக்கலாம் என கருதப்படுகிறது.

துபாய் அரசர் Sheikh Mohammedஇன் ஆறாவது மனைவியாகிய ஹயா, தனது பாதுகாவலருடன் நெருக்கம் காட்டியதாக அவரது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவர் பிரித்தானியாவுக்கு தப்பியோடிய விடயம் உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜோர்டான் மன்னரின் உறவினரான 45 வயதான இளவரசி ஹயா, தற்போது லண்டனில் வாழ்ந்தாலும், தாம் கடத்தப்படலாம் என்ற அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக தெரிகிறது.

காரணம் அவரது உறவினர்கள் பலர் அவரது கணவரின் தாக்கத்தால் கடத்தப்பட்ட செய்திகள் அவரது குடும்பத்தில் சகஜம்.

Sheikh Mohammedஇன் மகள்களில் ஒருவரான இளவரசி Latifa (33) அரண்மனையிலிருந்து தப்பியோடியபோது இந்திய கடல் பகுதியில் பிடிபட்டு கட்டாயப்படுத்தப்பட்டு வீட்டுக்கு திரும்பக் கொண்டு போகப்பட்டது அனைவரும் அறிந்ததே.

2000தில் Sheikh Mohammedஇன் மற்றொரு மகளான இளவரசி Shamsa, தனது தந்தையின் எஸ்டேட்டிலிருந்து தப்பியோடினார்.

பின்னர் அவர் அரசரின் ஊழியர்களால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இளவரசி ஹயா தற்போது கென்சிங்டன் அரண்மனைக்கு அருகில், கோடீஸ்வரரான லக்‌ஷ்மி மிட்டலிடமிருந்து வாங்கிய வீடு ஒன்றில் தங்கியிருப்பதாக கருதப்படும் நிலையில், அவருக்கு பிரித்தானியாவின் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று பாதுகாப்பு அளித்து வருகிறது.

இந்த விடயங்கள் குறித்து Sheikh Mohammedஇன் செய்தி தொடர்பாளர் ஒருவரிடம் கருத்து கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

இதற்கிடையில் Sheikh Mohammed தனது குடும்பப் பெண்களை மோசமாக நடத்தி வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இளவரசி ஹயாவும் பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்துள்ளதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவு பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.