கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண்ணின் செயல்….

தமிழகத்தில் சீக்கிரமாக கோடீஸ்வரியாகி சொகுசாக வாழ ஆசைப்பட்ட இளம்பெண் அதற்காக செய்து வந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (44). கோடீஸ்வர தொழிலதிபரான இவருக்கு பெட்ரோல் பங்க் மற்றும் கர்நாடகாவில் கல்குவாரி உள்ளது. இதோடு இவர் தனியார் பள்ளி ஒன்றிலும் பங்குதாரராக உள்ளார்.

சுரேஷ்குமார் கடந்த மாதம் 18ஆம் திகதி தனது மகனை பள்ளியிலிருந்து அழைத்து வர காரில் சென்ற போது வேறு காரில் வந்த மர்மநபர்கள் அவரை கடத்திச் சென்றனர்.

மறுநாள், சேலம் அருகே உள்ள அல்லிக்குட்டை என்ற பகுதியில், சுரேஷ்குமாரை இறக்கி விட்டு கடத்தல் கும்பல் தப்பிச் சென்றது.

பின்னர் பொலிசார் சுரேஷ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டபோது கடத்தல் கும்பல் 3 இடங்களில் காரை நிறுத்தி பெட்ரோல் போட்டதாக அவர் கூறினார். இதையடுத்து பெட்ரோல் பங்குகளில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்த பொலிசார் குறிப்பிட்ட ஸ்கார்பியோ கார் 3 பங்க்குகளில் பெட்ரோல் நிரப்பிச் சென்றதைக் கண்டறிந்தனர்.

பின்னர் கார் எண்ணை வைத்து கடத்தல் கும்பலை பொலிசார் சுற்றிவளைத்தனர்.

கடத்தல் கும்பலை சேர்ந்த செந்தில்குமார், அவரது தங்கையும் பத்திர எழுத்தருமான ஜெயந்தி, ஹரிபிரசாத், தீபக் ராஜ் ஆகிய 4 பேரை சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது ஜெயந்தி என்பதும், இதற்கு திட்டம் வகுத்துக் கொடுத்தவர் தொழில் அதிபர் சுரேஷ்குமாரின் நெருங்கிய உறவினர் ஹரிபிரசாத் என்பதும் தெரியவந்தது.

ஜெயந்தி அளித்துள்ள வாக்குமூலத்தில், கணவரை விவாகரத்து செய்து விட்டு தனியே வசித்து வந்த தனக்கு, பத்திரம் எழுதும் நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சேர்ந்து பத்திரம் எழுதி கொடுக்கும் வேலை செய்து வந்ததாக கூறியுள்ளார்.

அப்போது தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதுபோல், சுரேஷ்குமாரின் பங்காளி முறை உறவினரான ஹரிபிரசாத்துடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறினார் ஜெயந்தி.

விரைவாக நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற தனது ஆசையை ஹரிபிரசாத்திடம் வெளிப்படுத்தியபோது, அந்த நபர், சுரேஷ்குமாரைக் கடத்தினால் நிறைய பணம் பறிக்கலாம் என்றும், அதற்கு உதவுவதாகவும் கூறியதன் பேரிலேயே கடத்தல் திட்டம் வகுக்கப்பட்டதாக ஜெயந்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஹரிபிரசாத் கூறியபடி சுரேஷ்குமாரை கடத்தி அங்குள்ள வீடுகளில் அடைத்து வைத்து பணம் கேட்டு சித்ரவதை செய்துள்ளனர் .

பின்னர் பொலிசார் தங்களை தேடி வருவதை அறிந்து, சுரேஷ்குமார் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்துவிட்டு அவரை மிரட்டி அனுப்பி வைத்ததாக பொலிசாரிடம் ஜெயந்தி கூறியுள்ளார்.