அவுஸ்திரேலிய பந்து வீச்சில் சுருண்ட இலங்கை அணி !

இலங்கை அணிக்கெதிரான உலகக்கிண்ணம் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கிண்ணம் தொடரின் 20வது லீக் போட்டியில் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் நேருக்குநேர் மோதின.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்கள் குவித்தது.

அவுஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 132 பந்துகளில் 153 எடுத்திருந்தார். இலங்கை அணியில் தனஞ்சய டி சில்வா, இசுரு உதனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், லசித் மலிங்கா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் திமுத் கருணாரத்ன 97(108) மற்றும் குசல் பெரேரா 52(36) ஆகியோரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இதனால் 247 ரன்கள் எடுத்து பரிதாப நிலையில் இருந்த இலங்கை அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியடைந்தது.

இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.