பாகிஸ்தானை துவம்சம் செய்த ஆப்கானிஸ்தான் அணி!

உலககிண்ணத்திற்கான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது.

உலகக்கிண்ணம் தொடருக்கு முன்பாக நடைபெறும் பயிற்சி ஆட்டங்கள் நேற்று முதல் துவங்கின. இதில் ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இமாம்-உல்-ஹக் 32 ரன்களிலும், பகர் ஜமான் 19 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

ஒருபுறம் அணியின் விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருந்தாலும், நிலைத்து நின்று ஆடிய பாபர் ஆசம் 108 பந்தில் 112 ரன்கள் குவித்தார்.

மற்றொரு புறம் சோயிப் மாலிக் 59 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் தடுமாறிய பாகிஸ்தான் அணி 47.5 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 262 ரன்களை குவிந்திருந்தது.

ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி 3 விக்கெட்டும், ரஷித் கான், தவ்லாத் ஜத்ரான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தனர்.

263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில், துவக்க ஆட்டக்காரர் ஷாசத் 23 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக வெளியேறினார்.

அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் பொறுப்புடன் விளையாடியதால் 49.4 பந்துகளில் 7 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹஷ்மத்துல்லா ஷஹதி 74 ரன்களும், ஹஸ்ரதல்லாஹ் ஷாசய் 49 ரன்களும் குவிந்திருந்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் ரியாஷ் 3 விக்கெட்டுகளையும், வாசிம் 2 விக்கெட்டுகளும், சடப் கான், முகமது ஹஸ்னைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.