யாருக்கெல்லாம் இடம்? மோடி அவசர ஆலோசனை!!

மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 282 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது

மக்களவை தேர்தலில் 1984க்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் கட்சி என்ற பெருமையையும் பாஜக இந்த தேர்தலில் பெற்றுள்ளது.பிரதமர் மோடி மே 26 அல்லது 30 ஆம் தேதிகளில் பிரதமராக பதவியேற்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுவரை பாஜக இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்தநிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் புதிய அமைச்சரவை குறித்து விவாதம் நடத்த அதிக வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நித்தின் கட்காரி அவசரமாக டெல்லி சென்றுள்ளார்.

மேலும், மூத்த அமைச்சர்களுக்கு ஓய்வு அளிக்க மோடி விருப்புவதாகும் அதன்படி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அருண் ஜேட்லிக்கு நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு பியூஷ் கோயல் அடுத்த நிதி அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகின்றன

பாஜக சார்பில் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு முக்கிய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் தற்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் இந்த முறையும் கண்டிப்பாக இடம் இருக்கும். பாஜக கூட்டணிக் கட்சிகளில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி சரிந்து வரும் நிலையில், வர்த்தக போர் போன்றவற்றிலும் இந்தியா பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளதாகக் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துவருகின்றனர். எனவே இவற்றை எல்லாம் சமாளிக்கக் கூடிய வகையில் புதிய மத்திய அமைச்சகம் குறித்து எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும் அதிகரித்து வருகிறது.