இந்திய அணியை ஒரு கை பார்க்க வேண்டியுள்ளது! எச்சரிக்கும் தென் ஆப்பிரிக்க வீரர்

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது உள்ளது என தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கிசனி நிகிடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்து தொடங்கும் உலகக்கோப்பை தொடரில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. முன்னதாக, 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது.

அந்த தொடரில் இளம் வேகப்பந்து வீச்சாளர் லுங்கிசனி நிகிடி தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுகமானார். இந்நிலையில், தனது முதல் தொடர் தோல்வி குறித்து லுங்கிசனி நிகிடி கூறுகையில், ‘இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் வந்து விளையாடினர்.

அது அவர்களுக்கு அற்புதமான தொடராக அமைந்தது. அதனால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். இந்திய அணியுடனான போட்டியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். இந்திய அணி மிகப்பெரிய அணி அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால், அப்போது எங்கள் அணியில் சில வீரர்கள் இல்லை. தற்போது அவர்கள் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். இப்போது இந்திய அணியை ஒரு கை பார்க்க வேண்டியுள்ளது. நான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதும் உலகக்கோப்பை மீது எனது கவனம் இருந்தது.

உலகக்கோப்பை தொடரில் ஆடும் வாய்ப்பைப் பெற வேண்டும் என நினைத்திருந்தேன். அது தற்போது நனவாகியுள்ளது. உலகக்கோப்பையை வென்று அதனைத் தென் ஆப்பிரிக்க மண்ணுக்குக் கொண்டு வர விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.