நம் நாட்டையே இழக்க நேரிடும்… இலங்கையர்களே ஒன்று கூடுங்கள்! சங்ககாரா வேதனை

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான குமார் சங்ககாரா இலங்கையர்களாக ஒன்று கூடுங்கள் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலினால் 250-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயங்களுடன் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சமீபத்தில் நாட்டில் இஸ்லாமியர்களின் நிர்வாகநிலையங்கள் மற்றும் மசூதிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால், மீண்டும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதன் காரணமாக நேற்று சமூகவலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டன.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சங்ககாரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கண்களை திறங்கள். வன்முறை, இனவெறி, வேற்றுமையால் நாம் கண்களை மூடிக்கொண்டிருந்தால் நம் நாட்டையே இழக்க நேரிடும்.

இலங்கையர்களாக ஒன்று கூடுங்கள், சமாதானமாக இருங்கள், மற்றவர்களையும் பாதுகாப்புடன் வையுங்கள். பிரிவினையை தூண்டும் அரசியல்வாதிகளில் சூழ்ச்சிகளுக்கு விழுந்துவிடாதீர்கள். ஒரு நாடாக மீண்டும் மீண்டு வருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.