“நம்மால் வாழ்க்கையில்தான் ஒன்று சேர முடியவில்லை. சாவிலாவது ஒன்று சேர்வோம்” என்று சாதிக் கொடுமையால் காதல் நிறைவேறாத விரக்தியில் காதலன் lஉயிரை மாய்த்துக் கொண்டார்.
தற்கொலைக்கு முயன்ற காதலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரியலூரில் நடந்துள்ள இச்சம்பவம் சாதிக் கலவரத்தை உண்டாக்கிவிடக்கூடாது என்ற அச்சத்தால் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தற்கொலை
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. அவரின் மகன் பிரபு. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்.
இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அவருடன் படித்த உடையார்பாளையம் அருகேயுள்ள முனையதிரையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கயல்விழி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது.
இச்சம்பவம் கயல்விழி பெற்றோர்களுக்குத் தெரிய வர, மகளுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்து. சென்னை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் விஜய் என்பவருக்குக் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இருவரும் தனிக்குடித்தனம் நடத்திவந்திருக்கிறார்கள். திருமணம் முடிந்த பிறகும் காதலனின் நினைவுகள் மறக்கமுடியாமல் தவித்திருக்கிறார் கயல்விழி.
இது அரசல் புரசலாகக் கணவனுக்குத் தெரிய வரக் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கயல்விழி தன் காதலனுக்கு போன் செய்து வரவழைத்து இருவரும் ஊருக்குக் கிளம்பி வந்துவிடுகிறார்கள். இதனிடையே, கணவன் விஜய் கயல்விழியைக் காணவில்லை என்று பெற்றோருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்திலுள்ள பாலத்தின் அருகில் பிரபு, கயல்விழி இருவரும் நின்று பேசிக் கொண்டிருப்பதை அந்தப் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் பார்த்து, யார் நீங்கள், இங்கு என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டுள்ளனர்.
ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு கிளம்பிருக்கிறார்கள் இருவரும். “இன்னும் கொஞ்ச நேரத்தில் இச்சம்பவம் ஊர் உலகத்திற்குத் தெரிந்துவிடும்.
சாதி என்ற காரணத்தால் நம்மை வாழவிடமாட்டார்கள். நம்மைப் பிரித்துவிட்டார்கள். இனி நாம் சாவிலாவது ஒன்று சேர்வோம்” என்று சொல்லிவிட்டுக் கூவத்தூரில் உள்ள பாலத்தின் அடியில் இருவரும் சென்று ஊசிபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
கயல்விழி மயங்கி கீழே விழுந்துவிட, அவர் இறந்துவிட்டாள், ஆனால் நமக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று பிரபு அருகிலிருந்த ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.
தகவலறிந்த டி.எஸ்.பி. கென்னடி தலைமையில் ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் ஜெகதீசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பிரபுவின் உடலைக் கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மயக்கமடைந்த கயல்விழியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு முதல்கட்ட சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காகத் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கயல்விழி சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் சென்று ஆய்வு செய்தபோது அங்கு ஊசி ரத்தத்துடன் தரையில் கிடந்தது. பிரபு, கயல்விழி இருவரும் அணிந்திருந்த காலணிகளைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இந்தச் சம்பவத்தால் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.






