தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததற்காக மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்தவர் நல்லகுமார். இவரது மகன் அபிராம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பாடசாலையில் படித்து வந்தார். அவர் சமீபத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதியிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் அபிராம் 332 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்திருந்தார். ஆனால், தான் குறைவான மதிப்பெண் பெற்றதாக கூறி தனது உறவினர்களிடம் வருத்தப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.








