ஆண்களே மறந்தும் பெண்களிடம் செய்துவிட கூடாத சத்தியங்கள்!

சத்தியம் என்பது மறப்பதற்காக என்று திருமணமான ஆண்களின் அகராதியில் இருக்கிறது போல. மனைவியிடம் செய்த சத்தியத்தை மட்டும் அந்த பிரம்மன் கட்டம் கட்டி மறக்க செய்துவிடுவது போல படைத்துவிட்டானோ என்னவோ. மனைவியிடம் ஏகபோகமாக சத்தியம் செய்து, வேக வேகமாக மறப்பது ஆண்களின் குணாதிசயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இதில் சில சத்தியங்கள் நீங்கள் செய்து மறப்பதற்கு செய்யாமலேயே இருந்து விடலாம். ஏனெனில் அதன் எதிர்விளைவு மற்றும் வீரியம் ஓரிரு நாட்கள் என்ன, ஓரிரு வாரங்கள் கூட நீடிக்கலாம். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் பல வேளைகளில் பட்டினியாக தூங்க வேண்டிய கட்டாயம் கூட ஏற்படலாம். எனவே, மறந்தும் பெண்களிடம் இந்த சாத்தியங்களை செய்துவிட வேண்டாம்.

மாலை படத்திற்கு கூட்டி செல்வது

பெரும்பாலும் ஆண்கள் ஓர் சத்தியத்தை செய்து தங்களது இரவு உணவை இழப்பது அல்லது அன்றிரவு ஹோட்டல் சாப்பாட்டை வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் அது இந்த சத்தியமாக தான் இருக்கும். மாலை வந்ததும் உன்னை வெளியே கூட்டி செல்கிறேன் என்று கூறி மறந்துவிடுவது ஆண்களின் குலத்தொழிலாக மாறிவிட்டது.

நகை, புடவை வாங்கி தருவது

நகை மற்றும் புடவை விடயத்தில் நீங்கள் உங்கள் மனைவியிடம் சத்தியம் செய்து மறப்பதும், தனக்கு தானே சங்கு ஊதிக் கொள்வதும் ஒன்று தான். உங்கள் மனைவியை பத்திரகாளியாக பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் இந்த சத்தியத்தை நீங்கள் செய்யலாம்.

மாமனார் வீட்டுக்கு அழைத்து செல்கிறேன்

என்னதான் நீங்கள் தங்க தட்டில் வைத்து பார்த்துக் கொண்டாலும் கூட, தனது பிறந்த வீட்டிற்கு செல்வது என்பது பெண்களுக்கு எப்போதுமே குதூகலம் அடையும் ஓர் தருணம். இந்த விடயத்தில் சத்தியம் செய்து ஏமாற்றினால் இரவு பட்டினியாகதான் தூங்க வேண்டும்.

வீட்டிற்கு சீக்கிரம் வந்துவிடுவேன்

இது பல வீடுகளில் அன்றாடம் நடக்கும் ஓர் நிகழ்வு தான். அதிலும் மனைவி முக்கியமாக, அழுத்தமாக சீக்கிரம் வீட்டிற்கு வர சொல்லும் போது தான், நாம் மிகவும் நேர தாமதமாக செல்வோம். திருமணமானவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்த தருணத்தில் பெண்களின் முக பாவனை நவரசத்தையும் தாண்டும் என.

குழந்தையை நானே பாடசாலையில் விட்டுவிடுகிறேன்

இது மனைவியை மட்டுமல்ல, குழந்தைகளையும் கூட எரிச்சலூட்டும் சத்தியம். அவர்கள் தயாராகி கிளம்பலாம் என்று இருக்கும் போதுதான், என்னால் இப்போது முடியாது, முக்கியமான வேலை தாமதமாகிவிடும் என்று நேற்று செய்த சத்தியத்தை, சுத்தியல் கொண்டு உடைப்பார்கள் ஆண்கள்.

வீட்டு வேலைகளை செய்து முடிக்கிறேன்

வீட்டு வேளைகளில் ஆண்கள் செய்யும் சத்தியங்களுக்கு எல்லையே கிடையாது, அதை செய்து விடுகிறேன், இதை செய்து விடுகிறேன் என கடைசியில் ஒன்றைக் கூட செய்ய மாட்டார்கள்

பில் இன்றே கட்டிவிடுகிறேன்

மின்சாரம், தண்ணீர், வீட்டுவரி என ஆண்கள் தான் கட்ட வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் நிறைய பில்கள் இருக்கின்றன. இதை சொல்லும் திகதியில், சரியான நேரத்தில் முடிக்கும் ஆணாக நீங்கள் இருந்தால், உங்களுக்கு நீங்களே ஒரு முறை சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் 99.9% பேர் இதை உரிய நேரத்தில் செய்வதில்லை என மனைவிகள் மன்றம் குற்றம் சாட்டுகிறார்கள்.

நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்வது

திருமணம், பிறந்தநாள், நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விசேஷம் போன்றவை ஆண்களின் மண்டையில் சேமிப்பது மிகவும் கடினம். அவர்கள் இதற்காக தனியே ஹார்ட்டிஸ்க் வாங்கினாலும் கூட அதிலும் 404 ERROR தான் காட்டும் போல. மறந்த பிறகும் கூட நினைவில் இருப்பது போல உளறிக்கொட்டி மனைவியிடம் மாட்டிக் கொள்ளும் ஆண்கள் கூட்டம் மிகவும் பெரிது.