இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் போது உயிரிழந்த பிரித்தானிய பெண்ணொருவர், கடைசி நேரம் வரை தன்னுடைய கணவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவை சேர்ந்த லோரெய்ன் காம்ப்பெல் (55) என்ற பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்த லோரெய்ன் காம்ப்பெலின் உடல் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. ஆனால் சிசிடிவி காட்சிகளை கொண்டு பொலிஸார் ஆய்வு மேற்கொண்டதில், அவருக்கு அருகாமையிலேயே தற்கொலை குண்டுதாரி அமர்ந்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை வைத்து அவரும் தாக்குதலில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், டுபாயை சேர்ந்த நீல் எவன்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இதுகுறித்து நீல் எவன்ஸ் பேசுகையில், “தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு வரை என்னுடைய மனைவி எனக்கு தொலைபேசியில் குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார்.
ஆனால் தாக்குதல் நடந்த அடுத்த நிமிடமே அவரிடம் இருந்து குறுந்தகவல் எதுவும் எனக்கு வரவில்லை“ எனத்தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 359 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.