எமது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காணி வீடுகள் மற்றும் கட்டடங்களை அறிமுகம் இல்லாதவர்களுக்கு வாடகைக்கு வழங்கவேண்டாம்..

எமது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காணி வீடுகள் மற்றும் கட்டடங்களை அறிமுகம் இல்லாதவர்களுக்கு வாடகைக்கு வழங்குவதையோ விற்பனை செய்வதையோ தவிர்த்துக் கொள்ளுமாறு வடமாகாண முன்னாள் உறுப்பினர்களின் அமையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமையம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், கடந்த 21 ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலினால் பெருமளவானோர் கொல்லப்பட்டும் மேலும் பலர் காயமடைந்த நிலையிலும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் காயமடைந்தவர்கள் வெகு விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

நாட்டில் ஏற்பட்டுள்ள குண்டுத் தாக்குதலை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் மேலும் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்ச நிலை காணப்படுகின்றது. இதனால் பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் நாட்டின் பலபாகங்களிலும் தீவிர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மைக் காலமாக அதிக வாடகையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடுகள் மற்றும் கட்டடங்களை வழங்குவதையும் அதிக பணத்தினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு காணிகள் வீடுகள், கட்டடங்கள் விற்பனை செய்வதையும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான வீடுகள் தாக்கப்பட்டிருக்கின்றது. புதிதாக குடியிருப்போர் அயலவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் எமது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காணி வீடுகள் மற்றும் கட்டடங்களை அறிமுகம் இல்லாதவர்களுக்கு வாடகைக்கு வழங்குவதையோ விற்பனை செய்வதையோ தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது