திருச்சி ஸ்ரீரங்கம் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், பிரிவு உபச்சார நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது, அந்த நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாட நினைத்த மாணவர்கள், அந்த கேக்கை பட்டா கத்தி கொண்டு வெட்டி உள்ளனர்.
அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கியுள்ளனர். இந்த வீடியோ திருச்சி மாநகர காவல் துறையினரின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்திடம் ஸ்ரீரங்கம் காவல்துறையினர் கேக் வெட்டிய மாணவர்கள் குறித்து விசாரணை செய்தனர்.
அந்த கேக் வெட்டியவர்கள் எம்.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 9 பேர் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களை வீடியோவை ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர்களின், பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். வழக்கு பதிவு செய்தால் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், காவல்துறையினர் அவர்களை தோப்புக்கரணம் போட வைத்துள்ளனர். குறிப்பிட்ட எண்ணிக்கை முடிந்தவுடன் அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.






