கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 63) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிர் இழந்தார்.
கடந்த 2017 மார்ச் 14-ஆம் தேதி மூன்றாவது முறையாக கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவி ஏற்றார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கணைய நோய்க்கு சிகிச்சை பெற அமெரிக்கா சென்ற அவர், அங்கு இரு மாதங்கள் சிகிச்சைக்கு பின் ஜூன் மாதம் நாடு திரும்பினார் மனோகர் பாரிக்கர்.
மீண்டும் ஒருமுறை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற பாரிக்கர், சிகிச்சை முடிந்து தனது முதல்வர் பணியை சிறப்பாக ஆற்றினார் கடந்த சில மாதங்களாக உடல்நிலை மோசமடையவே மருத்துவமனையில் இருந்தபடி தனது பணியை செய்து வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இது பாஜக தொண்டர்கள் மற்றும் இந்திய மக்களை சொக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் மனோகர் பாரிக்கர் அவர்களின் மறைவுக்கு குடியரசு தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாமக நிறுவனர் ராமதாஸ், கிரிக்கெட் வீரர் சேவாக் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரின் இறப்பை தொடர்ந்து பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் அடுத்த புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் இன்று அதிகாலை 2 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து பல முக்கிய அறிவிப்புகள் இன்று அதிகாரபூர்வமாக வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.