முகநூல் வலைத்தளத்தை பயன்படுத்தி பெண்களை கவர்ந்து அழைத்து வந்து திட்டமிட்டு பாலியல் தொந்திரவு கொடுத்து, ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை வியாபாரமாக்கியதாக தற்பொழுது ஒரு சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது.
மேலும், இணையதள இளைஞர்கள் முதல், தெருமுனை திண்ணை வரை இன்று இந்த விஷயம் தான் விவாதத்திற்குள்ளாவதாக இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, சிலர் அதுபோன்ற இளைஞர்களை நம்பி எப்படி இந்த பெண்கள் தனியாக சென்றார்கள்? என்ற கேள்வியும் சிலர் கேட்கின்றனர்.
உண்மையில், இந்த விஷயம் அவ்வளவு பெரிதாக பார்க்கப்படுவதற்கு காரணம் அரசியல் தான். இது போன்று சம்பவங்கள் இதற்கு முன் நடந்ததே இல்லை என்றவாறு இந்த விஷயத்தை பிரபலமாக்கி உள்ளனர்.
இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் பல தமிழத்தில் நடந்து கொண்டு தான் இருந்தது. அதை ஒரு சாதாரண வழக்காகவே இது கருதப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி விட்டும், சில சமயம் தப்பிக்க விட்டும் இது போன்ற சம்பவங்களை முடித்துள்ளனர். இது நாம் அனைவரும் அறிந்ததே.
தேர்தல் நேரத்தில் இந்த சம்பவம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி அரசியலாக்கப்படுவதை நாம் உணர வேண்டும். சம்பவம் நடந்து பல நாட்களுக்கு பிறகு தான் இதை தற்பொழுது அனைவரும் பெரிதாக பேசி வருகின்றனர்.
அனைவரும் பார்த்து விட்டு கடந்த அந்த செய்தியை தான் தற்பொழுது வீடியோ வெளியிட்ட பின் மிகப்பெரியதாக நம் கண்களுக்கு தெரிகிறது. அதாவது அந்த விஷயம் முதலில் செய்தியாக நம்மை தாக்கியது. ஆனால், அது பயனற்று போனது.
அதையே வீடியோவாக பார்த்த போது, நமக்கு கோபங்கள் கொப்பளிக்கிறது. செய்தியாக வெளியிட்டு அதன் தாக்கம் மக்களிடையே ஏற்படவில்லை என உணர்ந்தவர்கள், அந்த பெண்ணின் எதிர்காலத்தை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் வீடியோ வெளியிடவும் துணிந்து விட்டனர்.
இது போன்ற விஷயங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், சம்பந்த பட்ட பெண்ணின் தகவல்களை அவர்களது அனுமதி இல்லாமலே வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்களது குடும்பத்தினர் மிகவும் வருத்தத்தில் உள்ளதாக தெரிகிறது. அந்த பெண்ணின் வீடியோவை வைத்து பணம் சம்பாதித்தவனை கயவனாக சித்தரிக்கும் பலர் தங்களது அரசியல் லாபத்திற்காக அந்த பெண்ணின் வீடியோக்களை வெளியிட்டு மக்களின் உணர்வுகளை தூண்டி அரசியல் செய்யும் இவர்கள் என்ன ரகம் என்பது உங்களது பார்வைக்கே விடப்படுகிறது.
இந்த செய்தியில் இருந்து நாம் உணவரவேண்டிய விஷயம் என்னவென்றால்., கடந்த பிப்ரவரி மாதத்தின் 24 ம் தேதியே இந்த பிரச்சனையானது வெளிவந்தது. ஆனால் அந்த சமயத்தில் கட்சிகளின் கூட்டணி குறித்த பிரச்சனை நிலவியதால்., எந்த விதமான தாக்கமும் இன்றி இந்த பிரச்சனை குறைய துவங்கியது. பின்னர் விசாரணை அறிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி மக்கள் அனைவரையும் சென்றடைந்தது.
இந்த பிரச்சனை வெளியான நாளில் இருந்தே காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அதாவது பிப் 26 ம் தேதியே 100 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தை கூறி திருநாவுக்கரசு அழைத்து வந்ததும்., அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. அந்த சமயத்தில் திருநாவுக்கரசு தலைமறைவாக இருக்க., அவனது நண்பரிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்த உண்மை வெளியானது.
அந்த நேரத்தில் அரசியல் தரப்பிலும் சரி இன்று இந்த பிரச்சனைக்கு கண்டனம் தெரிவிக்கும் பலரும் அன்று இந்த செய்தியை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கலாம். இன்று அதே பிரச்னையை அரசியல் ஆதாயத்திற்க்காக மையப்படுத்தி இந்த பிரச்சனைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்ற போர்வையால் பலர் ஆதாயத்தை தேடுகின்றனர் என்பதே கசப்பான உண்மை. இதுவும் உட்கார்ந்து யோசனை செய்தால்தான் புரியும் என்பதுதான் பெரும் துயர்……






