பிரதமர் மோடி தீவிரவாதியைப் போல் இருக்கிறார் என காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், நடிகையுமான விஜய சாந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஷாம்சாபாத் நகரில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சாரக் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் அமைச்சரும், நடிகையுமான விஜய சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மோடியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து விஜய சாந்தி பேசினார். அவர் கூறுகையில், ‘பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற அதிர்ச்சி வெடிகுண்டுகளை எந்த நேரத்தில், எந்த மாதிரியான வெடிகுண்டு வீசுவார் என்பது தெரியாமல் மக்கள் அவரைப் பார்த்து அச்சப்படுகின்றனர்.
இந்த மக்களவைத் தேர்தல் பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையே ஜனநாயகத்தைக் காக்க நடக்கும் போர். பிரதமர் மோடி தீவிரவாதியைப் போல் இருக்கிறார்.
சாமானிய மக்களிடத்தில் அன்பைப் பொழிவதற்குப் பதிலாக அவர்களை அச்சுறுத்துகிறார். ஒரு பிரதமர் இதுபோன்று செயல்படக்கூடாது. தனது ஆட்சியில் ஜனநாயகத்தைக் கொன்று, மக்களைத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டார்.
மீண்டும் அடுத்தமுறையும் பிரதமராக ஆசைப்படுகிறார். மக்கள் மனதில் வைத்துத் தேர்தலில் மிகுந்த எச்சரிக்கையாக வாக்களிக்க வேண்டும்.






