பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை இந்தியாவை சேர்ந்த இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் அம்பலாவை சேர்ந்தவர் பர்விந்தர் சிங்.
பாகிஸ்தானின் சியால்கோட் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கிரண் சர்ஜீத் கவுர். பர்வீந்தர் குடும்பத்தினரும், கிரண் குடும்பத்தினரும் தூரத்து உறவினர்கள் ஆவார்கள்.
இந்தியா, பாகிஸ்தானை தனித்தனியாக பிரித்த போது கிரண் குடும்பம் பாகிஸ்தானில் தங்கிவிட்டனர்..
இந்நிலையில் கடந்த 2014-ல் கிரண் தனது குடும்பத்தாருடன் இந்தியாவுக்கு வந்து, பர்விந்தர் சிங் வீட்டில் தங்கினார்.
அப்போது இரு குடும்பத்தினரும் கிரணுக்கும், பர்விந்தருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து பாகிஸ்தான் விசாவுக்கு 2017 மற்றும் 2018ல் பர்விந்தர் குடும்பம் விண்ணப்பித்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டது.
இதன்பின்னர் கிரண் குடும்பத்தார் இந்தியாவுக்கு விசா விண்ணப்பித்த நிலையில், இந்திய தூதரகம் அவர்களுக்கு பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவுக்கு தான் கொடுத்தது.
அதன்படி கிரண் மற்றும் குடும்பத்தார் அங்கு வந்தனர்.
அவர்கள் கடந்த 23ஆம் திகதியே இந்தியா வர நினைத்தனர், ஆனால் அந்த சமயத்தில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக பரபரப்பு நிலவியதால் இந்தியாவுக்கு வரமுடியவில்லை.
பரபரப்பு அடங்கியதையடுத்து 45 நாள் விசாவில் கிரண் மற்றும் அவர் குடும்பத்தார் சமீபத்தில் இந்தியா வந்தனர். அங்கு கிரணுக்கும், சர்ஜித்துக்கும் திருமணம் நடைபெற்றது.
இது குறித்து இரு குடும்பத்தார் கூறுகையில், இரு நாடுகளுக்கு இடையில் வேண்டுமானால் வேற்றுமை இருக்கலாம்.
ஆனால் எங்களது இரு குடும்பமும் என்றும் ஒற்றுமையோடு தான் உள்ளோம் என கூறியுள்ளனர்.
இதனிடையில் புதுப்பெண் கிரணின் விசாவை நீட்டிக்கவும், இந்திய குடியுரிமையை அவர் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.