இந்துக்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர்: இம்ரான்கான் அதிரடி நடவடிக்கை

பாகிஸ்தானில் இந்துக்களை தரக்குறைவாக பேசிய அமைச்சரை பதவி நீக்கம் செய்து பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் – இ – இன்சாஃப் கட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் மரணமடைந்ததால், இரு நாடுகளுக்கு இடையில் பெரும் பதற்றம் நிலவி வந்தது.

இந்த சமயத்தில் 24-ம் திகதியன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பஞ்சாப் மாகாண தகவல் மற்றும் கலாசார துறை அமைச்சர் பயாசுல் ஹசன், இந்துக்களை மிகவும் தரக்குறைவாக பேசினார்.

இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அனைவரும் கண்டன குரல் எழுப்ப ஆரம்பித்தனர். அதேசமயம் ட்விட்டரில் பணிநீக்கம் செய்யுமாறு ஹேஸ்டேக் ஒன்று ட்ரெண்டிங் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தெஹ்ரீக் – இ – இன்சாஃப் கட்சி தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில், பஞ்சாப் மாகாண தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பதவியில் இருந்து பயாஸ் சோகன் நீக்கப்பட்டுள்ளார். இந்து சமூகத்தை அவமதிக்கும் வகையில் அவர் கருத்து தெரிவித்ததற்காக சோகன் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மத நம்பிக்கையை அவமானம் செய்வதை எங்கள் கட்சி பொறுத்துக் கொள்ளாது. சகிப்புத்தன்மைக்கு நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம் என பதிவிடப்பட்டிருந்தது.

முன்னதாக இம்ரான்கானின் தெஹ்ரீக் – இ – இன்சாஃப் கட்சி பாகிஸ்தானிலும், பஞ்சாப் மாகாணத்திலும் ஆளும் கட்சியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.