சுகமான கொலையாளியின் வாழ்க்கை..!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி பகுதியில் தொடர்ச்சியாக பல கொலைகள் செய்து திருட்டில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து பொன்னமராவதி காவல்துறையினர் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் பொன்னமராவதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக கையில் மஞ்சள் பையுடன் வந்த சுரேஷ் (45) என்ற நபரை சோதனையிட்டபோது, பையில் கயறு, கத்தி, சாக்ஸ் உள்ளிட்டவை இருந்தன.

சந்தேகமடைந்த காவல் அதிகாரிகள் விசாரணை செய்ததில், அவர் தேவகோட்டை ஜீவாநகரைச் சேர்ந்த செல்வராஜ் என்பதும் பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதும், ஏற்கனவே தேவகோட்டை காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி எனவும் தெரியவந்தது.

இவர் கடந்த 1996-ம் ஆண்டு தனது நண்பர்களான பெருமாள், ராசு ஆகியோருடன் சேர்ந்து காரைக்குடியில் நகைக்காக ஒரு பெண்ணை கொலை செய்துள்ளனர்.

அந்த வழக்கில் 1999-ம் ஆண்டு மூன்று பேருக்கும் சிவகங்கை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் செல்வராஜ் பரோலில் வெளிவந்து தலைமறைவானார்.

இதுதொடர்பாக தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்த நிலையில், ‘தனது பெயரை சுரேஷ் தகப்பனார் பெயர் துரைராஜ்-மதுரை’ என கூறிக்கொண்டு சென்னை அருகில் இருக்கும் கல்பாக்கத்தில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.