புல்வாமா மாவட்டத்தில் மீண்டும் குண்டுவெடிப்பு.!!

கடந்த மாதம் 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் இந்திய துணை இராணுவப் படைகள் சென்ற வாகனத்தின் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் போர் விமானம் மூலமாக பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், முகாமிட்டிருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை வெடிகுண்டுகள் வீசி தரைமட்டமாக்கியது. இதில் முக்கிய பயங்கரவாத அமைப்பின் முகாம்களும் தகர்க்கப்பட்டன. இது இந்தியர்களுக்கு ஒரு மன நிம்மதியாக இருந்தது.

இந்திய இராணுவத்தின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் ராணுவம் பகிரங்கமாக அறிவித்த நிலையில், இரு தினங்களுக்கு முன் பாகிஸ்தான் ராணுவத்தின் ராணுவ விமானங்கள், இந்திய எல்லைக்குள் புகுந்து இந்திய தளவாடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.

அப்போது இந்திய போர் விமானங்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் போர் விமானங்கள் தலைதெறிக்க ஓடினர். தாக்குதலின் போது பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய போர் விமான விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில், வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தனை பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே, கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இன்றும் இந்திய வீர்ர்கள் மீது பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கி சூடு நடத்திவருகிறது. இந்திய இராணுவ வீரர்களும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், சற்றுமுன், காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.