கடும் வறட்சியின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் வறண்டு கிடக்கின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடி தண்ணீருக்காக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
விவசாயத் தொழிலை மட்டுமே பிரதானமாக நம்பியிருந்த மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். இம் மாவட்டத்தில் மொத்தம் 1856 ஏரிகள் உள்ளன.
இதில் 1256 ஏரிகள் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட் டில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், 110 ஏக்கர் பரப்பளவில் வேங்கிக் கால் ஏரி அமைந்துள்ளது.
பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் மூலமாக, பல ஆண்டுகளாக நூற் றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
மழைக் காலங்களில் திருவண்ணாமலை மலையிலிருந்து வரும் மழை நீரானது ஓடைகள் மூலம் வேங்கிக்கால் ஏரியை வந்தடைகிறது.
மேலும், கவுத்திமலைப் பகுதிகளிலிருந்து வரும் மழை நீரானது ஆடையூர் ஓடை வழியாக இந்த ஏரிக்கு வருகிறது. ஆனால். கடந்த சில ஆண்டுகளாக இந்த ஏரிக்கு நீர்வரத்து வழங்கிய ஓடைகள், கால்வாய்கள் ரியல் எஸ்டேட் தொழிலாலும், நில ஆக்கிரமிப்பாளர் களாளும் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மற்றும் கவுத்தி மலைகளிலிருந்து, கிரிவலப் பாதையில் குபேர லிங்கத்திற்கும், சந்திரலிங்கத் திற்கும் இடையில் இருந்த மலை ஓடை வேங்கிகால் ஏரிக்கு நீர்வரத்தை கொடுத் தது.
கடந்த ஆண்டு பெய்த கன மழைக்கு முன்னதாக இந்த ஓடை அழிக்கப்பட்டதால் வேங்கிக்கால் ஏரிக்கு நீர்வரத்து வராமல் தடைபட்டது. இதனால் தற்போது ஒரு சொட்டுத் தண்ணீர் இன்றி ஏரி வரண்ட பாலைவனமாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், வேங்கிக்கால் ஏரியில் மாவட்ட ஊராட்சியின் மாநில நிதி ஆணைய திட்டத்தின் கீழ் 2018-2019 ஆம் ஆண்டில் ரூ.9.99 லட்சம் மதிப்பீட்டில் புதிய திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த ஏரியில் ஏற்கனவே, 18 ஆழ்துளை கிணறுகளும், 6 திறந்தவெளி கிணறுகளும், 3 குளங்களும், 2 பண்ணை குட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கிணறுகள் மூலமே, வேங்கிக்கால் பகுதியில் உள்ள 20 ஆயிரம் மக்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டிய நிலையில் உள்ளது.
எனவே, இந்த ஏரியின் நீராதாரத்தை காக்க வேண்டியது அவசியமாகிறது. அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆசியுடன் கொள்ளையடிக்கப்பட்ட இயற்கை கால்வாய்களும், ஓடைகளும் மீண்டும் சீரமைக்கப்பட வேண்டும், இயற்கை வளங்களை மீட்டெடுப்பதன் மூலமே, இப்பகுதி தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க முடியும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.






