முகநூல் நட்பு மூலம் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் உள்பட 100 பெண்களை சீரழித்து ஆபாச வீடியோ படம் எடுத்த குற்றவாளியை பொலிசார் தேடி வரும் நிலையில், தலைமறைவாகவுள்ள அந்த குற்றவாளி பொலிசுக்கு சவால் விடுக்கும் வகையில் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பொள்ளாச்சி பகுதியில் முகநூல் மூலம் பழகி கல்லூரி மாணவிகள் மற்றும் திருமணமான பெண்களை மயக்கி ஆபாச வீடியோ எடுத்த முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இவரை பொலிசார் தேடி வரும் நிலையில் பொலிசுக்கு சவால் விடுவது போல ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த ஆடியோவில் பெண்களை மயக்கி ஆபாச வீடியோ எடுத்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், குறிப்பாக ஒரு பெரிய அரசியல்வாதியின் குடும்பத்து பெண் இருப்பதாகவும், ஒரே ஒரு பெண் மட்டுமே பொலிசுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மற்ற 99 பெண்களும் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் திருநாவுக்கரசு தெரிவித்திருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் திருநாவுக்கரசு பிடிபட்டால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், பைனான்சியர் மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.