திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ராமசாமி நகரில் சில வாரங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இங்கு டாஸ்மாக் கடை திறக்க கூடாது என போராட்டம் நடத்தியுள்ளனர். அதைமீறி திறக்கப்பட்டுள்ளதால், இதை கண்டித்து சுற்று வட்டாரமக்கள் பலமுறை போராட்டம் நடத்துயுள்ளனர். இருந்தும் பலனில்லை.
நேற்று மீண்டும் போராட வந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் போராட்டம் நடத்த வந்த போது தகவல் தெரிந்து டாஸ்மாக் பணியாளர்கள் கடையை மூடி விட்டு சென்றுள்ளனர்.
மூடிய அந்த டாஸ்மாக்கின் முன்பு அங்கிருந்த செங்கல்களை அடுக்கி போராட்டம் நடத்தினர். அங்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் நீங்கள் பணம் வாங்கி கொண்டு போராட்டம் செய்கிறீர்கள் இங்கிருந்து செல்லுங்கள் என எச்சரித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து பைபாஸ் சாலை நோக்கி சென்று மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவே மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.