முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா ஜோடி நிதானமாக விளையாட ஆரம்பித்தது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமான சூழலில் இருந்ததால் தொடக்க ஜோடி நிதானமாக விளையாடியது.

ஜெமிமா 48 ரன்களிலும், ஸ்மிரிதி மந்தனா 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் மிதாலி ராஜ் மட்டும் ஒருபுறம் நிதானமாக ஆட மற்றவர்கள் நடையை கட்ட அவரும் 44 ரன்களில் அவுட்டானார். இறுதி நேரத்தில் தனியா பாட்டியா (25), ஜூலன் கோஸ்வாமி (30) ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளிக்க இந்திய அணி 49.4 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

எளிய இலக்கு நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் 3 வீராங்கனைகளின் விக்கெட்டுகளை வேகமாக இழந்தது. அதன் பின்னர் வந்த, கேப்டன் ஹேத்தர் நைட் – நடாலி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க ஆரம்பித்தது. இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில், 41 ஓவர்களில் 136 ரன்களை மட்டுமே இங்கிலாந்து அணி எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஹேத்தர் நைட் மட்டும் 39 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார். இதன்மூலம் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில், ஏக்தா பிஸ்த் 4 விக்கெட்டுகளையும், ஷிகா பாண்டே, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.