புல்வாமா மாவட்டத்தில் தற்கொலை படை தாக்குதலை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம், பிகேனர் மாவட்ட நிர்வாகம் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும். ஹோட்டல் மற்றும் லாட்ஜ்களில் தங்குவதற்கு பாகிஸ்தான் குடிமக்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.
இந்திய குடிமக்கள் பாகிஸ்தான் மக்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வணிகத்தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது. பிகேனர் மாவட்டத்தை சேர்ந்த யாரும் பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளை உபயோக படுத்தக்கூடாது. யாரும் பாகிஸ்தானுடன் எந்த தகவல் பரிமாற்றமும் செய்யக்கூடாது. இந்த உத்தரவு இன்னும் 2 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று பிகேனர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் கூறியவை, எந்த விதமான ஆதாரமும் இல்லாமல், புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டி உள்ளது. ஆதாரங்களை இந்தியா அளித்தால் நிச்சயமாக அதன்மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும்.
தீவிரவாதம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம், இந்தியா பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். தாக்குதல் எதுவும் நடைபெற்றால் பாகிஸ்தானும் தக்க பதிலடி கொடுக்கும் என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.