ஹெல்மெட் வாங்க பணம் இல்லை: மண்சட்டி மாட்டி நூதன போராட்டம்..!

புதுச்சேரியில், கட்டாய ஹெல்மெட் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் தலையில் மண் சட்டியை மாட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இந்த சட்டம் தளர்த்தப்பட்டது. ஆனால், ‘ஹெல்மெட் அணியாததால் கடந்த ஆண்டில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று கூறி, மீண்டும் ஹெல்மெட் கட்டாயத்தை அமல்படுத்தி டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 11ம் தேதி முதல் புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதுடன், ஆங்காங்கே போராட்டங்களும் நடந்தன.

இந்நிலையில், புதுச்சேரி அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 5 முதல் 50 மாதங்கள் வரை நிலுவையில் உள்ள சம்பளம் வழங்காத நிலையில், 50க்கும் அதிகமான ஊழியர்கள் ‘ஹெல்மெட் வாங்க எங்களிடம் பணம் இல்லை; எனவே, ஹெல்மெட் அணியும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்’ என வலியுறுத்தி தலையில் மண்சட்டியை மாட்டிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் சென்று நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் கூறுகையில், “புதுச்சேரி அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 5 முதல் 50 மாதங்கள் நிலுவையில் உள்ள சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பலர் தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர்.

இவர்களுக்கு சம்பளத்தை வழங்குவதைப்பற்றி கவர்னர் கவலைப்படாமல், ஹெல்மெட் அணிய வலியுறுத்துகிறார். முதலில், சம்பளம் இல்லாமல் உயிர்போவதை தடுங்கள்; அப்புறம் ஹெல்மெட் அணியாமல் உயிர் போவதை தடுக்கலாம்” என தெரிவித்தார்.