வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த பார்த்திபராஜாவின் மனைவி சினேகா. இவர் வழக்கறிஞராக உள்ளார். இவர் தான் எந்த சாதி மற்றும் மதம் அற்றவர் என்று திருப்பத்தூர் தாசில்தாரிடம் சான்றிதழ் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே சாதி மதம் அற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் சினேகா பெற்றார்.
இந்நிலையில் இதுகுறித்து சினேகா கூறுகையில், தான் முதல் வகுப்பில் இருந்து, கல்லுாரி வரை, சாதி,மதம் இல்லாதவள் என்று கூறியே படித்தேன். மேலும் என் சான்றிதழ்களில் ஜாதி, மதம் என்று எதுவும் குறிப்பிடவில்லை. அதேபோல் என் தங்கைகள் மும்தாஜ், ஜெனிபருக்கும் ஜாதி, மதம் எதுவும் குறிப்பிடவில்லை.
அதுமட்டுமின்றி எனக்கும், எனது கணவர் பார்த்திப ராஜாவுக்கும் சடங்கு, தாலியின்றி, கடந்தாண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் சாதி மற்றும் மதமற்றவர் என்று சான்றிதழ் வழங்கும்படி, திருப்பத்துார் தாசில்தார் அலுவலகத்தில், பலமுறை மனு கொடுத்திருந்தேன். நீண்டபோராட்டத்திற்கு பிறகே எனக்கு இந்த சான்றிதழ் கிடைத்தது என்று கூறினார்.
இந்நிலையில் சாதி மதம் இல்லாதவள் என புகழ்பெற்ற சிநேகாவிற்கு, நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே! pic.twitter.com/w1a22F2GRh
— Kamal Haasan (@ikamalhaasan) 13 February 2019