நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் மேக்கரிமங்கலம் காலனி தெருவைச் சேர்ந்தவர் அஞ்சம்மாள். கணவனை இழந்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மனோகரன்(29). இவர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இளைய மகன் மகேந்திரன்(22) கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி.இந்நிலையில் மாலை அதே பகுதி சாலையில் நடந்து சென்ற மாற்றுத்திறனாளி மகேந்திரனை, அதே ஊரைச் சேர்ந்த ரெத்தினம், மாசிலாமணி மகன்சிவராஜ் ஆகியோர் கிண்டல் செய்து கேவலமாக பேசினராம்.
இதை தட்டிக் கேட்ட மகேந்திரனை அவரது ஊன்றுகோலை பிடுங்கி கொடூரமாக அவர்கள் தாக்கினராம். பலத்த காயமடைந்த அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாற்றுத்திறனாளி வாலிபரின் புற ஊனத்தை கொச்சைப்படுத்தி கேவலமாக பேசி கடுமையாக தாக்கிய நபர்கள் மீது மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆகியோர் உரியநடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதனிடையே, ஏன் எனதுதம்பியை தாக்கினீர்கள் எனக் கேட்ட மனோகரனை, ரெத்தினம் குடும்பத்தைச் சேர்ந்த மதிவாணன், கலைவாணன் ஆகியோர் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.






