நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினம்.. சிறப்பு பூஜை நடத்தும் போனி கபூர்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் போனி கபூர் சிறப்பு பூஜை நடத்த உள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி, பிரபல நடிகை ஸ்ரீதேவி குளியலறைக்கு சென்றபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 24ஆம் திகதி வருவதால், சென்னையில் உள்ள அவரது வீட்டில் சிறப்பு பூஜை செய்ய ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஏற்பாடு செய்துள்ளார்.

ஸ்ரீதேவியின் நினைவு தினம் 24ஆம் திகதி தான் என்றாலும், அவரது நட்சத்திரப்படி வரும் 14ஆம் திகதி திதி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நடைபெற உள்ள சிறப்பு பூஜையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருடன் அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், போனி கபூரின் சகோதரர் அனில் கபூர் மற்றும் உறவினர்கள் கலந்துகொள்கின்றனர்.