மேடையில் நெகிழ்ந்த ஏஆர் ரஹ்மான் மகள்…

மும்பையில் நடந்த விழா ஒன்றில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் தனது தந்தை குறித்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ படத்தின் இசைக்காகவும், பாடலுக்காகவும் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றார்.

தற்போது அந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், அதற்காக மும்பை தாராவி பகுதியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதிஜாவும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏ.ஆர்.ரஹ்மான்-கதிஜா உரையாடுவது போல் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது தனது தந்தை குறித்து கதிஜா நெகிழ்ச்சியுடன் பேசினார்.

அவர் பேசும்போது, ‘அப்பாவை நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு. இந்தப் பெருமைக்கு காரணம் அவரோட உலகப் புகழ் இல்லை. அவருக்கு நல்லா வருகிற இசையில்லை. அப்பா எங்க மூன்று பேருக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார், நற்பண்புகளுக்காக அவரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

இரண்டு ஆஸ்கர் வாங்கிட்டு வந்து பத்து வருஷம் ஆகிடுச்சு. இன்னும் அப்பா அதே ரஹ்மானாகத்தான் இருக்கார். அணு அளவும் அவர் மாறவில்லை. அப்போது எப்படி இருந்தாரோ, அதே மாதிரி தான் இருக்கிறீர்கள். என்ன, எங்கக் கூட இருக்க நேரம் மட்டும் குறைந்திருக்கு.

சினிமா மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் அப்பா சிறந்து விளங்கினார். ஒருத்தருக்கு உதவி செய்தார் என்றால் கூட, மூன்றாவது ஆள் சொல்லித்தான் சில விடயம் எனக்கு தெரிய வரும். வலது கை கொடுத்த இடது கைக்குத் தெரியக் கூடாது என்பதற்கான மொழிக்கு எடுத்துக் காட்டானவர்’ என்று கூறினார்.

பின்னர், நாங்கள் எங்களோட வேலைகளுக்குப் போகப்போறோம், எங்களுக்கு நீங்கள் கொடுக்கிற அறிவுரை என்னவென்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில்,

‘நான் யாருக்கும் அறிவுரை பண்ணமாட்டேன். உங்கள் மனசு சொல்றதை கேளுங்கள். எங்க அம்மா எனக்கு சொல்லித் தந்ததை நான் உங்களுக்கு சொல்லித் தரணும். உங்கள் மனசு தான் உங்களுக்கான சிறந்த வழிகாட்டி’ என தெரிவித்தார்.