சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரின் தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் ஷிப்டு முறையில் போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.
மணிகண்டன் (27) என்ற போலீஸ்காரர் இன்று காலை 5 மணி அளவில் இங்கு பணிக்கு வந்தார். இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3-வது பட்டாலியனை சேர்ந்தவர். மணிகண்டன் சீருடையில் துப்பாக்கி ஏந்திய நிலையில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
காலை சுமார், 5.50 மணி அளவில் மணிகண்டன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மணிகண்டன்.
மணிகண்டனின் துப்பாக்கி சத்தம் ஐ.ஜி.அலுவலகம் மட்டுமின்றி அந்த பகுதி முழுவதுமே எதிரொலித்தது. இதனால், பல பகுதிகளில் இருந்த காவலர்கள் ஓடிவந்து பார்த்துள்ளனர்.
மணிகண்டன் இருந்த நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மணிகண்டனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்துள்ள நிலையில், அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒருவேளை காதல் விவகாரத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் மணிகண்டனுக்கு இன்று பிறந்த நாளாகும். அவரது தற்கொலை குறித்து உறவினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அனைவரும் சென்னை நோக்கி விரைந்துள்ளனர்.
இது உறவினர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்ததும் மணிகண்டனின் உடலை வாங்க அவரது உறவினர் காத்திருக்கின்றனர்.






