குழந்தை பிறந்த சில நாட்களிலே மனைவி இறந்ததால், தற்போது ஒரு தாயாக மாறியிருக்கிறேன் என அயர்லாந்தை சேர்ந்த தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.
அயர்லாந்தை சேர்ந்த பாரி கெல்லி (26) – கரேன் மெக்வேயி (24) தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
மூன்றாவது குழந்தையை வயிற்றில் சுமந்த மெக்வேயிற்கு கடந்த மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு 7 நாட்கள் கழித்து காய்ச்சல் போன்ற அறிகுறிகள், கடுமையான பின்புறம் மற்றும் வயிற்று வலியால் மெக்வேயி தாக்கப்பட்டார்.
இதனையடுத்து வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மெக்வேயிற்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவருடைய கணவர் பாரி கூறுகையில், என்னுடைய மனைவி உயிருக்கு போராடி கொண்டிருக்கையில் அருகில் என்னை அழைத்தாள். நானும் அவளுடைய கையை இறுக்கமாக பிடித்து கொண்டிருந்தேன்.
அப்பொழுது அவள், நான் உன்னை எப்பொழுதுமே காதலிக்கிறேன் என கூறினாள். எனக்கு பயம் அதிகரித்து விட்டது. நானும் அவளுடைய கையை பிடித்துக்கொண்டு, நானும் உன்னை காதலிக்கிறேன். நீ நிச்சயமாக என்னை விட்டு பிரிய மாட்டாய். நமக்கு 2025-ல் திருமணம் நடைபெறும்.
நாம் புதிய வீடு ஒன்று கட்டுவோம் என கூறிக்கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள் அவள் உயிரிழந்துவிட்டாள்.
நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால், மனைவியின் உடலை யாரும் தொட வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அதனால் என்னுடைய குழந்தைகளை எப்படி சமாளிப்பது என தெரியாமல், தேவதைகள் வருகை தந்து அம்மாவிற்கு இறக்கைகளை கொடுத்துள்ளனர். அம்மா ஒரு மாய தேவதை பெட்டியில் இருப்பார். அவர் வரும்போது நீங்கள் அவரை தொடக்கூடாது என கூறினேன்.
தற்போது என்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு குழந்தைகளுக்கு ஒரு தாயாகவும், தந்தையாகவும் இருந்து வருகிறேன் என வேதனை தெரிவித்துள்ளார்.