ஆடாமலே ஜெயிச்சோமடா! – இந்தியாவின் சாய்னா நேவால்

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி தொடர் ஆனது இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வந்தது. இந்த போட்டித் தொடரின் மகளிர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்பெயினை சேர்ந்த கரோலினா மரின் உடன் இந்தியாவின் சாய்னா நேவால் விளையாடினர். முன்னணி வீராங்கனை என்பதால் தொடங்கியது முதல் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

வேகமாக தொடங்கிய கரோலினா மரின் மூன்று புள்ளிகளைப் பெற்ற பிறகே இந்தியாவின் சாய்னா முதல் புள்ளியை பெற்றார். மிக வேகமாக முன்னேறிய மரின் 10 புள்ளிகளைப் பெற்ற போது சாய்னா 4 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக தசைப்பிடிப்பினால் மைதானத்தில் சுருண்டு விழுந்தார் கரோலினா மரின் . இதையடுத்து மேலும் ஆட்டத்தை தொடர முடியாத கரோலினா மரின் தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

இதனையடுத்து ஆட்டத்தை முடிக்காமலேயே இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டார். கடந்த 2017ஆம் ஆண்டு இந்த போட்டி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நேவால் தற்போது மீண்டும் இந்த பாட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.

இது குறித்து சாய்னா கூறுகையில், இந்த ஆண்டு சிறப்பாக தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நினைத்த நிலையில் துரதிஸ்டவசமாக கரோலினா மரின் காயம் அடைந்து விட்டார். கரோலினா மரின் மிகச்சிறந்த போட்டியாளர். அவர் காயமடைந்த வருத்தமளிக்கிறது. நானும் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளேன். அவரும் காயத்திலிருந்து மீண்டு விளையாட வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு காயத்தில் இருந்து மீள்வதற்கு உதவிய பயிற்சியாளர்களுக்கும் உடற்தகுதி நிபுணர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.