இந்தியாவில் 200 ரூபாய் கொடுத்து லாட்டரி டிக்கெட் வாங்கிய நபருக்கு 2 கோடி பரிசு விழுந்துள்ளதால், அவர் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளார்.
பஞ்சாப்பைச் சேர்ந்தவர் அஷோக், 26 வயதான இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ஹோசியர்பூர் மாவட்டத்தின் சதர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணிக்கு சேர்ந்தார்.
கான்ஸ்டெப்பிளாக இருக்கும் இவர் சமீபத்தில் 200 ரூபாய் கொடுத்து 2 கோடிக்கான லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.
அதிர்ஷ்டத்தின் மூலம் தற்போது அவர் கோடீஸ்வரராக மாறிவிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் எல்லாம் இல்லை. காவல் நிலையத்திற்கு வந்த லாட்டரி டிக்கெட் விற்பனையாளர், என்னை ஒரு டிக்கெட் வாங்கும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தார்.
அப்போது தீபாவளி சீசன் என்பதால் வாங்கவேண்டாம் என்று யோசித்தேன்,பிறகு ஒரு நாள் ஒரு முயற்சி எடுப்போம் என்று தான் வாங்கினேன். முதலில் அது கைக் கூடவில்லை.
பின்னர் இரண்டாவது முறையாக லோரி நேரத்தில் ஒன்று வாங்கினேன். அது தான் இப்போது எனக்கு கைக் கொடுத்திருக்கிறது.
லாட்டரி விற்பனையாளர் இந்த விஷயத்தை எனக்கு ஜனவரி 16-ஆம் திகதியே கூறிவிட்டார். ஆனால் அரசுப்பூர்வமான தகவல் வரும் வரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என நான் தான் ரகசியமாக வைத்திருந்தேன்.
இப்போது வரையும் பரிசுத்தொகை வென்றதை என்னால் நம்ப முடியவில்லை, என்னை போன்ற ஒரு நடுத்தர குடும்பத்தினர் இந்த தொகையை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த தொகை எனக்கான சில கடமைகளை நிறைவடையச் செய்ய உதவும். கடன் தொல்லை போன்றவற்றையெல்லாம் யோசிக்காமல் இனி எனது பணியை சிறப்பாக செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும் பரிசு விழுந்திருக்கும் 2 கோடி ரூபாயில், 30 சதவீதம் வரிப் பணம் போக மிச்சம் இருக்கும் பணம் அவருக்கு லாட்டரி பரிசாக கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.