பிரித்தானியாவில் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களிக்கவே பிரசவத்தை தள்ளிப்போட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர் தமது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் தெரேஸா மேவால் முன்னெடுக்கப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தமானது சொந்த கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களால் முறியடிக்கப்பட்டது.
இந்த நிலையில் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான 36 வயது துலிப் சித்திக் தெரேஸா மே கட்சிக்கு எதிராக வாக்களிக்கவே தமது பிரசவத்தை தள்ளிப்போட்டிருந்தார்.
வாக்களிப்பதற்காக நாடாளுமன்றத்தில் சக்கர நாற்காலியில் அவைக்கு கொண்டுவரப்பட்ட உறுப்பினர் துலிப் சித்திக் தெரேஸா மேவுக்கு எதிராக வாக்களித்துவிட்டு சென்றார்.
தெரேஸா மே முன்னெடுக்கும் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களிக்கவே தாம் பிரசவத்தை தள்ளி வைத்துள்ளதாக கூறிய உறுப்பினர் சித்திக்,
17 ஆம் திகதி பகல் 9.59 மணியளவில் பிள்ளை பெற்றெடுத்துள்ளார். தற்போது தமது மகனின் புகைப்படத்தை அவர் சமுக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
நாட்டின் அதிமுக்கியமான வாக்கெடுப்பு நடைபெற இருப்பதால், நிறைமாத கர்ப்பிணியான தாம் தமது பிரசவத்தை தள்ளி வைத்துள்ளதாக கடந்த 15 ஆம் திகதி உறுப்பினர் சித்திக் தெரிவித்திருந்தார்.
14-ஆம் திகதியே பிரசவத்திற்கு மருத்துவர்களால் ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில் வாக்கெடுப்பிற்காக மட்டுமே அவர் தமது முடிவை மாற்றியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் Hampstead மற்றும் Kilburn தொகுதியில் போட்டியிட்ட துலிப் சித்திக் சுமார் 23,977 வாக்குகளில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.






