பூ பூக்குமா என்று வேடிக்கை பார்க்கும் அரசு – தினம் தினம் அவதியுறும் மக்கள்.!

பயன்பாடின்றி காட்சிப்பொருளாக இருந்து வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீர் நிரப்பி குடிநீர் விநியோகத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ராமியன அள்ளி பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராமியனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட அருந்ததியர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இம்மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவதற்காக மாநில நிதி குழுமம் சார்பில் 2015 – 2016 ஆம் ஆண்டில் ரூ.2 லட்சம் மதிப்பில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டமேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

ஆனால்,இந்த நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளான நிலையில் தற்போது வரை அவைகாட்சிப் பொருளாகவே உள்ளது.

இதன்மூலம் தண்ணீர் விநியோகம் நடைபெறாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், குடிநீருக்காக அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலைமை உள்ளது.

ஆகவே, ஆழ்துளை போர்வெல் அமைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

ஆகவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.