“இனப்பிரச்சனை நீடிப்பதற்கு, சிங்களவர்களிற்கு புரியும் விதமான தமிழர்கள் தமது பிரச்சனையை சொல்லாததே காரணம். சிஙகளவர்களிற்கு புரியும் மொழி என நாங்கள் முப்பது வருடங்களாக யுத்தம் புரிந்தோம். அது சிங்களவர்களிற்கு புரியவில்லை. சிங்களவர்களிற்கு புரியும் மொழியென்பது அவர்களின் மனச்சாட்சி. அது பௌத்த ஐதீகக்கதைகள், தம்மபதத்தின் மீதே அது கட்சியெழுப்பப்பட்டுள்ளது. நாம் பௌத்தர்களாக பேசினாலே சிங்களவர்கள் புரிந்து கொள்வார்கள்“
இப்படி தெரிவித்திருக்கிறார் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி கிளை தலைவருமான கே.சயந்தன்.
நேற்று முன்தினம் (17) சாவகச்சேரியில் நடந்த உழவர் தினமும், பட்டிப்பொங்கலும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இப்படி தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்-
“இந்த நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக வடக்குமாகாண ஆளுனரை அழைக்க வேண்டும் என்று எல்லோருடைய வேண்டுகோளும் இருந்த நேரத்தில் புதிதாக வந்த ஆளுனர் இதற்கு சம்மதிப்பாரோ என்று ஏற்பாட்டளர்கள் சார்பில் அவரோடு அணுகி, எங்களுடைய கலாசார விழுமியங்களை நாங்கள் அழிந்து போகாமல் பாதுகாக்க வேண்டும் ஆளுநராகிய தாங்கள் அதில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டபோது அவர் எங்களை விடவும் கலாச்சார விழுமியங்கள் பேணப்படவேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பவர் என்பதை நாங்கள் அடையாளம் கண்டோம்.
அவர் தாய்மொழியால் தமிழர், மதத்தால் கிறிஸ்தவர் தன்னுடைய கல்வி முயற்சினால் பௌத்த மதம் சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர். தேரவாத பௌத்தமும் அரசியலும் என்ற தலைப்பில் அவர் பல ஆய்வுகளை செய்து ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டு அவருடைய கலாநிதி பட்டடப்படிப்பிற்குரிய ஆய்வுமுயற்சிகூட அதுவாகத்தான் இருந்தது.
உண்மையாகவே புரியும் படி பேசுதல் என்று ஒன்று இருக்கின்றது புரியும் படி பேசுதல் என்றால் என்ன? தாய்மொழியில் பேசுவது புரியுமா? பரீட்சயமான மொழியில் பேசுவது புரியுமா? விளங்கக்கூடிய மொழியில் பேசுவது புரியுமா? என்று புரியும் படி பேசுவதைப் பற்றிப் பலர் ஆய்வு செய்திருக்கின்றார்கள். இலங்கை இணமுரண்பாடு இருக்கின்ற ஒரு நாடு. இந்த இனமுரண்பாடு இவ்வளவு காலமும் தீர்த்து வைக்கப்படாமல் இருப்பதற்கு தமிழர்களாகிய நாங்கள் சிங்களவர்களுக்கு புரியும் மொழியில் இதுவரை பேசவில்லை என நான் நினைக்கின்றேன்.
ஒரு காலத்தில் சிங்களவர்களுக்குப் புரியும் மொழியில் பேசுவதென்று கூறி சிங்களவர்களுக்கு அடிகொடுத்தால் அதுதான் அவர்களுக்க புரியும் மொழி என்று முப்பது வருடங்களாக அவர்களோடு யுத்தம் புரிந்து பார்த்திருக்கின்றோம். ஆனாலும் சிங்களவர்களுக்கு எதுவும் புரிவதாகவில்லை. அப்பிடியென்றால் சிங்களவருக்குப் புரியும் மொழி எது என்ற கேள்வி எழுகின்றது.
சிங்களவர்களுடைய புரிதல் அவர்களுடைய மனச்சாட்சி. அவர்களுடைய உள்ளார்ந்த வியாக்கியானம் எல்லாம் தம்ம பதத்தின் மீதும் ஐதீகக்கதைகள் மீதும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. நாம் தமிழராகப் பேசுவதும் வேறு அவர்கள் சிங்களவராகப் பேசுவதும் வேறு. அதேபோல் சிங்களப் பௌத்தராகப் பேசுவதும் வேறு. நாங்கள் சொல்லும் விடயத்தைச் சிங்களவர் புரிந்து கொள்வதற்கு நாங்கள் பௌத்த மொழியில் பேசவேண்டியவர்களாக இருக்கின்றோம். பௌத்தர்கள் நாங்கள் எங்களுடைய சிந்தனைமொழியில் பேசுவதை சிங்களவர்கள் தங்களுடைய பௌத்தமதச் சிந்தனைப் பின்னணியில் அந்தமதத்தின் போதனைப் பின்னணியில் பிழையாக வியாக்கியானம் செய்யக்கூடும்.
இந்து சமய அல்லது கிறிஸ்தவ சமய அல்லது இஸ்லாம் சமயங்களின் சிந்தனைப் பின்னணியில் அல்லது போதனைப் பின்னணியின் அடிப்படையில் நாங்கள் சிங்களவருக்குச் எங்களது விடயங்களைச் சொல்லுவதற்கு முயலும்போது ஏற்படும் இடைவெளியில்தான் சிங்களவருக்கும் எமக்கும் புரிதல் இல்லாமல் போகின்றது. ஆகையினால் எங்களுடைய புரிதல் பின்னணியில் சிங்களப் பௌத்தர்களும் சிங்களப் பௌத்தர்களுடைய புரிதல் பின்னணியில் நாங்களும் பேச வேண்டியிருக்கின்றது. அதை நாங்கள் இன்னும் செய்யவில்லை என்றே நான் கருதுகிறேன்.
ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் இப்படியான உரையாடலுக்கு ஓர் ஊடகமாக ஓர் இடைத்தொடர்பாளராக இருப்பார் என நாம் எதிர்பார்க்கின்கின்றோம். எனவேதான் அப்பிடியான ஒருவரை இந்த நிகழ்வுக்கு அதுவும் எமது சாவகச்சேரித் தொகுதிக்கு ஆளுநர் வருகின்ற முதல் நிகழ்வாக இது இருக்க வேண்டும் என்று இந்த நிகழ்விற்கு அவரை அழைத்தோம். நாங்கள் ஓர் வீழ்ந்து போன இனமாக மீண்டெழ வேண்டியவர்களாக இருக்கின்றோம். அத்தகைய எழுச்சி விழாவாக இந்ந விழாவை கருதிக்கொள்ளுங்கள். மத குல வேறுபாடுகள் எதுவுமில்லாமல் தமிழர்களாக மீண்டெழுவோம் என அறைகூவல் விடுக்கிறேன்.
நாங்கள் தற்போது வாழ்கின்ற காலப்பகுதி மதத்தால், இனத்தால், சாதியால் அல்லது பிரதேசத்தால் பிரிவதற்கான காலப்பகுதியல்ல. தமிழர்களாக ஒன்றிணைந்து எழுந்து நிற்க வேண்டிய காலப்பகுதி. இங்கே பிரிவினைகளுக்ககு இடமில்லை. இனத்தைப் பல கூறுகளாக பிரிப்பதற்கு இடமில்லை. ஆகையினால் இந்த விழா தமிழர்களுடைய விழா. தமிழ் பேசுபவர்களுடைய விழா. எல்லா மதத்தினருடைய விழா. இது உழவர் விழா. பசுக்களை போற்றுகின்ற விழா என்றுகூறி இன்று நாங்கள் ஒன்றிணைந்திருக்கிறோம்.
அதுதவிரவும் இன்றைய தினம் இந்த ஆளுநரை அழைத்ததற்கு இன்னுமொரு காரணமும் இருக்கின்றது. 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து வடக்கு கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட பொழுதிலிருந்து ஆளுநர்கள் எனப்படுவேர் எங்களை அடக்கி வைக்கின்ற ஒரு அடையாளமாக தான் நியமனம் செய்யப்பட்டார்கள். வடக்கு கிழக்கில் தமிழர் பிரச்சினையை தீர்க்க தீர்வாக அறிமுகம்செய்யப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையில் முதலாவது ஆளுநர் அதுவரைக்கும் யுத்தத்தை நடாத்திய இலங்கையினுடைய இராணுவத் தளபதி நளின் செனவிரட்ண என்பவராவார்.
அதே போல 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து விட்டது சமாதானம் வந்து விட்டது என்று அறிவித்துவிட்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆளுநர் அது வரை யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதியாகவிருந்த மேஜர் ஜெனரல் சந்திரசிறி என்பவராவர்.
அந்த இராணுவ தளபதி சந்திரசிறியை அழைத்து வந்து சிங்காசனம் போட்டு அமர்த்தி கௌரவித்தவர்கள் மத்தியில், நாம் ஓர் தமிழ் ஆளுநரை முதன்மை விருந்தினராக இந்நிகழ்வுக்கு அழைத்திருக்கின்றோம்.
ஆகையினால் சிங்களப் பௌத்தர்களோடு தொடர்பாடல் ஊடகமாக இருக்கக்கூடிய தற்போதைய ஆளுநரை இந்நிகழ்வுக்கு அழைத்ததை யாரும் பிழை காண முடியாது என்பது எனது அபிப்பிராயமாகும். இந்த ஆளுநர் ஆக்கிரமிப்பின் சின்னமாக, அடிமைப்படுத்துதலின் சின்னமாக அல்லது மத்திய அரசாங்கத்தால் மாகாணத்தை அடக்குகின்ற சின்னமாக இருக்கமாட்டார் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்“ என்றார்.
இந்த நிகழ்வில் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவனும் கலந்து கொண்டார்.






