திருவாரூர் மாவட்டம் கொராடச்சேரியை அடுத்த செட்டி சிமிலியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 26). சமையல் செய்யும் தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா (வயது 21). இவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை.
இந்நிலையில் காமராஜ் பெற்றோர்களுக்கும், கவுசல்யா பெற்றோர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இரு குடும்பத்தாரும் பேசாமல் இருந்து வந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி கவுசல்யாவின் தாய் ஜெயந்தி சீர்வரிசை பொருட்களை வாங்கி சென்று மகளிடம் கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த காமராஜ், சீர்வரிசை பொருட்களை வேண்டாம் என்று பிடிவாதம் செய்து அந்த பொருட்களை எடுத்து சென்று அதே பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் வைத்துவிட்டு வந்து உள்ளார். இது கவுசல்யாவுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதைப்பற்றி ஜெயந்தி கொராடச்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் கவுசல்யா தற்கொலை செய்து கொண்டதால் இது தொடர்பாக திருவாரூர் ஆர்.டி.ஓ. முருகதாசும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.






