தென்மராட்சி- கொடிகாமம், கெற்பேலிப் பகுதியில் மண் கடத்தியவர்கள் பொலிசார் மீது நேற்று முன்தினம் இரவு உழவு இயந்திரத்தை மோதிவிட்டுத் தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் மேலும் 3 பொலிசார் காயங்களுக்குள்ளாகினர்.
கெற்பேலியில் மண் கடத்தப்படுகின்றது என்று கொடிகாமம் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்துப் பொலிஸார் 4 பேர் மோட்டார் சைக்கிள்களில் அந்தப் பகுதிச் சென்றுள்ளனர். வீதியோரம் சோதனை மேற்கொண்டிருந்தபோது, உழவு இயந்திரம் ஒன்றை மறிக்க சப் இன்ஸ்பெக்டர் வீதிக்கு வந்துள்ளார். உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர்கள் அவர் மீது மோதித் தள்ளித் தப்பிச்சென்றனர் என்று கூறப்படுகின்றது. உழவு இயந்திரம் சப் இன்ஸ்பெக்டர் மீது ஏறிச் சென்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது ஏனைய 3 பொலிசாரும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
உழவு இயந்திரம் ஏறியவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏனைய 3 பேரும் விடுதியில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடைபெறுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.